மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்
வகுப்பின் முதல்நாளன்று
முன்பொருமுறை எங்களிடம் கேட்டார்
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க ?".

முதல் பெஞ்சை யாருக்கும்
விட்டுத்தராத உஷாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் கோரசாக!

இன்று கல்யாணம் முடித்து
குழந்தைகள் பெற்று
ரேசன்கடை வரிசையில்
உஷாவையும்
கூந்தலில் சொருகிய சீப்புடன்
குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதையும்
எப்போவதாவது பார்க்க நேர்கிறது

"என்ஜீனியர் ஆகப் போகிறேன் "
என்ற அருண்குமார்
பாதியில் கோட்டடித்து
பனியன் கம்பெனி வேலைக்கு
போய்விட்டான்

"எங்க அப்பாவுடைய
இரும்புக்கடையைப் பாத்துப்பேன் "
கடைசி பெஞ்சு சந்திரபாபு
சொன்ன போது
எல்லாரும் சிரித்தார்கள்
இன்றவன் ஆஸ்திரேலியாவில் MBA
படித்துக்கொண்டே டாலராக
சம்பாதிக்கிறான்

அனுவிஞாநியாவேன் என்று சொல்லி
ஆச்சரியங்களில் எங்களை தள்ளிய
ஆனந் இப்போது
TNPSC எழுதி
கடைநிலை உழியனானான்

ப்ளைட் ஓட்டுவேன்
என்ற நான்
கணினியை துடைத்தபடி
காலம் தள்ளுகிறேன்

வாழ்க்கை காற்று எல்லாரையும்
திசைமாற்றி போட
" வாத்தியாரவேன் " என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்

" நெனச்ச வேலையே செய்ற
எப்படிருக்கு மாப்ளே ?" என்றேன்

சாக்பீஸ் துகள்கள் படிந்த விரல்களால்
என்கையை பிடித்து
" படிச்சு முடிச்சதும் என்ன
ஆகப் போறீங்க ?" ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை " என்றான் ......

2 comments:

Unknown said...

not bad
any love experience in your childhood???

Karthik Sambuvarayar said...

arumai....ungal kavithai en siruvayathai nyabagam paduthiyathu..

Lunax Free Premium Blogger™ template by Introblogger