ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி
ஆச வச்சேன் அவமேல
மீச வச்சேன் ஒதட்டு மேல
குளத்தங்கரைப் படிக்கட்டுல
குளிக்க வருவா வெடலப் புள்ள

கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக் கண்ணு சிவந்திருச்சு
கெட்ட கோவம் வந்திருச்சு
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர் கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மான மருவாதி கப்பலேறியாச்சு
ரெண்டாயிரம் கப்பங் கட்டியாச்சு

அவ மேல ஆசப்பட்ட கதைய
எவகிட்ட சொல்லி அழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல் கெடக்கே!
ரெண்டு நாளு பட்டினி கெடந்தேன்
பட்டணம் போக மூட்ட கட்டுனேன்
கருத்தப் புள்ளய காதலிச்ச கதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்

வெடுவெடுன்னு நடந்து போயி
வீசிப்புட்டேன் அவ மேல
திரும்பிக்கூடப் பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பாக் கெளம்பி
வெரசா ரயிலப் புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவ நினப்பு!
புகையக் கக்கிப்புட்டு
கெளம்புது செவத்த ரயிலு!
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ண மூடி ஒக்காந்தா
கனவுல அவ முகம்
கண்ணு முழிச்சுப் பார்த்தா
எதிர்தாப்புல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவ சிரிக்கா!
கண்ணால புரியாத காதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுதிருக்கா
ஓடோடி வந்திருக்கா
தாலி கட்டப் போறேன்
தாரமாக்கப் போறேன்
பட்டணம் போயி, பத்தாயிரம்
சம்பாதிக்கப் போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்த புள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
வெரசா ஓட்டு இது ரயிலு வண்டியா
இல்ல கட்ட வண்டியா?

0 comments:

Lunax Free Premium Blogger™ template by Introblogger