அப்போது நான் காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்

எங்கள் வகுப்பு எப்போதுமே கலகலப்பானது , வகுப்பில் நான் , ராஜமாணிக்கம் , குமரேசன் ( நான் இல்லை மற்றொரு குமரேசன் ) முன்று பேரும் ஒன்றாக தான் இருப்போம் ஆளுக்கொரு பொண்ண செலக்ட் பண்ணி சைட் அடிப்போம் அது ஒரு அறியா பருவம் சரி விசயத்துக்கு வருகிறேன் , எங்க வணிகவியல் ஆசிரியர் எங்களிடம் உங்க rollmodel யாருன்னு கேட்டாரு அவனவன் என்னனோமோ ரீலு விடுகிறான் , காந்திகாரனுக , MGR நு ஒரு பாவிபய புள்ள சொல்லுது , என் முறை வந்தது நான் G.D.நாயுடுவை சொன்னேன் அவரை பற்றி தெரியுமா என்றார் எங்க ஆசிரியர் எனக்கு தெரிந்த கொஞ்சம் விசயத்த சொன்னேன் , மேலும் அவர் G.D.நாயுடுவை பற்றி சில தகவல்கள் சொன்னார்
பின்னர் முடிவு செய்து விட்டேன் வாழ்தால் G.D.நாயுடுவைபோல வாழ வேண்டும் என்று ! G.D. நாய்டுவை பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.டி. நாயுடு மார்ச் 23, 1893 - என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

வாழ்க்கை

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

தனித்திறன்கள்

இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

ஆரம்பத்தோல்விகள்

அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

சாதனைகள்

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.

ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.

உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

7 comments:

ketta paiyan said...

oh G.D.Naidu is your Rollmodel

He has 2wife and many keeps so yous follow them weldone

Anonymous said...

Realy G.D.Naidu was a born scientist

Joseph Kishore said...

Realy G.D.Naidu was a GREAT scientist

Joseph Kishore said...

Realy G.D.Naidu was a GREAT scientist

MANOJ N said...

Hello brother,,, superb.....
but wikipedia layum ithethan irukku.....

Unknown said...

G.D Naidu is a good person also. I don't know more about him so tell more.....

Unknown said...

A great scientist from india...
But the government don't like him.
But lose is also government side not a GTN side.

Lunax Free Premium Blogger™ template by Introblogger